மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு புத்தகம் விற்பது போல் வந்த மர்ம நபர் கைவரிசை


மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் சங்கிலி பறிப்பு புத்தகம் விற்பது போல் வந்த மர்ம நபர் கைவரிசை
x
தினத்தந்தி 20 Feb 2019 10:15 PM GMT (Updated: 2019-02-21T01:10:38+05:30)

திருச்சி உறையூரில் புத்தகம் விற்பது போல் வந்து மிளகாய்பொடியை தூவி பெண்ணிடம் மர்ம நபர் சங்கிலியை பறித்து சென்றார்.

திருச்சி,

திருச்சி உறையூர் பனிக்கன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டர். இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 27). இவர் நேற்று முன்தினம் பகல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு புத்தகம் விற்க ஒருவர் வந்தார். அவர் ஈஸ்வரியிடம் புத்தகங்களை விலைக்கு வாங்கி கொள்ளும்படி பேச்சு கொடுத்தார்.

அப்போது திடீரென அந்த வாலிபர் வீட்டினுள் புகுந்து கதவை பூட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி கூச்சல் போட முயன்றார். அதற்குள் அந்த வாலிபர் மிளகாய் பொடியை ஈஸ்வரி முகத்தில் வீசினார்.

இதில் கண் எரிச்சலால் அவர் அலறியபோது, அவருடைய கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க சங்கிலியை அந்த வாலிபர் பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரி தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனே வீட்டுக்கு வந்து நடந்ததை பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் இதுகுறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பட்டப்பகலில் வீடு புகுந்து சங்கிலி பறித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story