சென்னையில் இருந்து மும்பை செல்ல போதையில் வந்த வாலிபரை விமானத்தில் ஏற்ற மறுப்பு ஊழியர்களிடம் ரகளை செய்ததால் கைது
சென்னையில் இருந்து மும்பை செல்ல குடிபோதையில் வந்த வாலிபரை விமானத்தில் ஏற்ற மறுத்ததால் ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்வதற்காக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜவகர் (வயது 30) என்பவர் வந்தார். அவர், விமான நிறுவன கவுண்ட்டருக்கு சென்று ‘தான் மும்பை செல்வதற்காக போர்டிங் பாஸ்’ தரும்படி கேட்டார்.
அப்போது ஜவகர், அளவுக்கதிகமான மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விமான சட்டவிதிகளின்படி அளவுக்கதிகமான போதையில் இருப்பவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை. எனவே ஜவகருக்கு ‘போர்டிங் பாஸ்’ வழங்க விமான நிறுவன ஊழியர்கள் மறுத்தனர்.
குடிபோதையில் ரகளை
போதையில் இருந்த ஜவகர், இதனால் கடும் ஆத்திரம் அடைந்தார். ஊழியர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, ரகளையில் ஈடுபட்டார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருப்பது உறுதியானது.
கைது
அவர் சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கிருந்து வெளிநாடு செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜவகர் மீது போதையில் விமான நிலையத்தில் கலாட்டா செய்தது, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story