பட்டிவீரன்பட்டி அருகே ஜல்லிக்கட்டு நடத்தியதில் கோஷ்டி மோதல்


பட்டிவீரன்பட்டி அருகே ஜல்லிக்கட்டு நடத்தியதில் கோஷ்டி மோதல்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்தியது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 கடைகள் அடித்து சூறையாடப்பட்டன. போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டிவீரன்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் கடந்த 15-ந்தேதி ஜல்லிக்கட்டு சின்னமுத்தாலம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இந்த ஜல்லிக்கட்டுக்கான வரவு- செலவு கணக்குகளை நேற்று முன்தினம் இரவு கோவில் மண்டபத்தில் ஜல்லிக்கட்டு குழுவினர் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் மண்டபத்தின் முன்பாக நின்று கூச்சல் போட்டனர். இதுகுறித்து ஜல்லிக்கட்டு குழுவினர் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு குழுவினரும், மண்டபத்தின் முன்பு நின்றவர்களும் இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். கற்கள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் 2 கடைகள் அடித்து சூறையாடப்பட்டன.

இந்த மோதலில் சின்னஅய்யம்பாளையம் ஜல்லிக்கட்டு குழுவை சேர்ந்த ராஜா (வயது 42) மற்றும் மற்றொரு தரப்பை சேர்ந்த பழனிகுமார் (39), குமார் (42) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் ராஜா மதுரை அரசு மருத்துவமனையிலும், பழனிகுமார், குமார் ஆகியோர் திக்கல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து இரு கோஷ்டியினரும் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நாகராஜன், ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் கார்த்திகேயன் உள்பட 50 பேர் மீது பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த பாஸ்கரன் (58), முத்தையா (45), கருப்பையா (65), சுப்பையா (29), குமரேசன் (32) ஆகிய 5 பேரையும், மற்றொரு தரப்பை சேர்ந்த மருதுபாண்டி (46), ராம்குமார் (34), தெய்வேந்திரன் (46), முத்துராமன் (21), சிவராமகிருஷ்ணன் (29) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மீதமுள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அய்யம்பாளையத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் தெருக்கள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் அய்யம்பாளையம் வழியாக திண்டுக்கல், தாண்டிக்குடி பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டது.

நேற்று அதிகாலை முதல் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்தியது தொடர்பாக இந்த மோதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story