ஆண்டிப்பட்டி அருகே, வைக்கோல் படப்புக்கு தீ வைத்த விவசாயி கைது


ஆண்டிப்பட்டி அருகே, வைக்கோல் படப்புக்கு தீ வைத்த விவசாயி கைது
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 8:47 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே வைக்கோல் படப்புக்கு தீ வைத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். செல்போனை தவற விட்டதால் அவர் சிக்கி கொண்டார்.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கீ.காமாட்சிபுரம் தென்பழஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இதற்காக, தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் வைக்கோல் படப்பு வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் படப்பு முழுவதும் எரிந்து நாசமானது.

இந்தநிலையில் செல்வத்தின் தோட்டத்துக்குள் ஒரு செல்போன் கேட்பாரற்று கிடந்தது. அந்த செல்போனை செல்வம் எடுத்தார். இது, அதே பகுதியை சேர்ந்த விவசாயி பிரேம்குமார் (34) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இது தொடர்பாக ராஜதானி போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் செய்தார்.

அதில், தனது தோட்டத்தில் பிரேம்குமாரின் செல்போன் கிடந்ததால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வத்தின் வைக்கோல் படப்புக்கு தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

செல்வமும், பிரேம்குமாரும் அக்காள்-தங்கையை திருமணம் செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமியாருடன் பிரேம்குமார் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அப்போது, மாமியாருக்கு துணையாக செல்வம் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்து செல்வத்தின் வைக்கோல் படப்புக்கு தீ வைத்ததாக பிரேம்குமார் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் தீ வைத்தபோது யாரும் தன்னை பார்த்து விடக்கூடாது என்பதற்காக தப்பி ஓடியபோது தோட்டத்துக்குள் செல்போனை தவற விட்டு விட்டதாகவும் போலீசாரிடம் பிரேம்குமார் கூறினார்.

Next Story