திருப்பூர் அருகே தனியார் பஸ்–ஸ்கூட்டர் மோதல்; ஆசிரியை பலி
திருப்பூர் அருகே தனியார் பஸ்–ஸ்கூட்டர் மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலியானார்.
நல்லூர்,
திருப்பூர் பல்லடம் ரோடு ஷெரீப் காலனியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 34). கார் டிரைவர். இவருடைய மனைவி சரண்யா (30). இவர் பல்லடம் சாலை வீரபாண்டியில் உள்ள விரிக்ஸா இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுடைய மகன் நித்திலேஷ் (5).
இந்த நிலையில் பெருந்தொழுவு சாலை டி.கே.டி. ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு தேர்வு எழுத ஸ்கூட்டரில் நேற்று காலை சரண்யா சென்றார். திருப்பூர்–பெருந்தொழுவு சாலையில் சத்யாகாலனியை கடந்து சென்றபோது எதிரே பெருந்தொழுவில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பனியன் நிறுவன பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சும்–ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சரண்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருப்பூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்வுஎழுத சென்ற தனியார் பள்ளி ஆசிரியை விபத்தில் பலியான சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.