ஆனைமலை அருகே 700 ஆண்டு பழமையான நடுகல் கண்டெடுப்பு
ஆனைமலை அருகே 700 ஆண்டு பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
பண்டைய காலத்தில் தமிழகத்துடன் வணிகம் மேற்கொண்டிருந்த யவன வணிகர்கள் மேற்குக் கடற்கரையிலிருந்து தமிழகத்தின் உட்பகுதி மற்றும் கிழக்குக் கடற்கரையை அடைவதற்குப் பாலக்காடு கணவாயை பயன்படுத்தினர். அவ்வாறு பாலக்காடு கணவாயில் இருந்து கிழக்கு நோக்கிச்சென்ற பெருவழிகளில் முக்கியமானது வீரநாராயண பெருவழி ஆகும்.
இப்பெருவழி ஆனைமலை, வடபூதிநத்தம், சி.கலையமுத்துர், பழனி, திண்டுக்கல், மதுரை, திருத்தங்கல் வழியாக பண்டைய பாண்டிய நாட்டுத் துறைமுக நகரமான அழகன்குளம் சென்றடைந்தது. தமிழ்நாட்டுடன் யவனர்கள் மேற்கொண்டிருந்த வணிகத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஆனைமலை, வடபூதிநத்தம், சி.கலையமுத்தூர் ஆகிய ஊர்களில் யவன காசுகளும், அணிகலன்களும் மிகுதியாகக் கிடைத்துள்ளன.
குறிப்பாகப் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவில் அமைந்துள்ள ஆனைமலை அருகே சிங்காநல்லூரில் கி.பி. முதல் நூற்றாண்டில் ரோம் நாட்டை ஆட்சி செய்த டைபிரீயஸ் மன்னனின் வெள்ளி நாணயங்கள் 40 கிடைத்துள்ளன. இந்தநிலையில் சிங்காநல்லூரில், திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், சு.சதாசிவம், க.பொன்னுச்சாமி மற்றும் பேராசிரியர் ச.மு.ரமேஷ்குமார் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வின் போது தமிழகத்தில் மிகவும் அரிதான 700 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
இதைப் பற்றி ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது:–
பழந்தமிழர் வாழ்வில் போர்கள் அன்றாட நிகழ்வாக இருந்தன. இந்தப் போரில் வீரத்துடன் சண்டையிட்டு உயிரிழந்த வீரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நடுகல் எடுக்கப்பட்டு செயற்கரிய செயல்களை செய்த, அந்த மாவீரனை வழிபட்டால் இன்னல்கள் நீங்கி, வளம் மிகும் என்று கருதி வழிபாடு இன்று வரை செய்கின்றனர். இந்த நிகழ்வை நமது சங்க இலக்கியம் முதல் இடைக் கால இலக்கியமான கலிங்கத்து பரணி வரை பதிவு செய்துள்ளன.
இங்கு நமக்கு கிடைத்துள்ள வீரநடுகல் 75 செ.மீ. உயரமும், 75 செ.மீ அகலமும் உடையது ஆகும். இதில் வீரனின் அள்ளி முடிந்த குடுமி இடது புறம் சாய்ந்து உள்ளது. வீரன் தனது வலது கையில் ஓங்கிய வாளுடன் காட்சியளிக்கிறார். இடது தோளில் மாட்டியிருந்த வில் கையில் சற்றே கீழே இறங்கிய நிலையில் காணப்படுகிறது.
மாவீரன் தன்னுடன் போரிட்டுத் தோற்ற வீரனின் தலையைத் தன் இடது கையில் ஏந்திப் பிடித்து மிகவும் கம்பீரமாக நடந்து செல்வது போல் இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரன் தன் இடையில் மட்டும் நல்ல வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை அணிந்து உள்ளார். காது மற்றும் கழுத்தில் அணிகலன்களும், கை மற்றும் கால்களில் வீரத்துக்கு அடையாளமாக வீரக்காப்பும் அணிந்துள்ளார்.
எதிரிவீரனுடன் போரிட்ட போது இந்த மாவீரனால் காப்பாற்றப்பட்ட ஒரு பெண்ணின் உருவமும் வீரனுக்கு இடது பக்கம் காட்டப்பட்டுள்ளது. இதில் மாவீரனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவரின் இரண்டு கைகளும் கும்பிட்ட நிலையில் உள்ளன. அப்பெண்ணின் சிகை அலங்காரம் இடதுபக்கம் சாய்ந்தபடியும், காது மற்றும் கழுத்துப் பகுதிகளில் அணிகலன்களும் அணிந்துள்ளார்.
இடையில் அணிந்துள்ள ஆடை, அவரின் பாதம் வரை காட்டப்பட்டுள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். அப்பெண் அருகிலேயே ஒரு குழந்தையும் வணங்கியபடி காட்டப்பட்டுள்ளது. எதிரிவீரனின் தலையைக் கையில் வைத்திருக்கும் இந்த அரிதான நடுகல்லில் எழுத்துகள் இல்லை. நடுகல் அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இந்த நடுகல் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது ஆகும்
இவ்வாறு பொறியாளர் சு.ரவிக்குமார் கூறினார்.