பயிர் இழப்பீட்டு தொகை வழங்குவதில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் தற்காலிக பணி நீக்கம்


பயிர் இழப்பீட்டு தொகை வழங்குவதில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் தற்காலிக பணி நீக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:30 PM GMT (Updated: 20 Feb 2019 9:15 PM GMT)

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதையொட்டி சங்க செயலாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சிவகங்கை,

காரைக்குடி அருகே உள்ள நாட்டுச்சேரி களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தினர். விசாரணையில் நாட்டுச்சேரி களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2017–18–ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்த 1,486 பேரில் முதல் கட்டமாக 537 நபர்களுக்கு ரூ.1 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 324 இழப்பீட்டு தொகையாக வரப் பெற்றுள்ளது.

இந்த தொகையை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் சேமிப்பு கணக்குகளில் வரவு வைக்கப்படும் போது 4 பேருக்கு கூடுதலாக பணம் வழங்கியது தெரியவந்தது. மேலும் பட்டியலில் வரப்பெறாத 2 பேருக்கும் சேர்த்து பணம் வழங்கியது தெரிந்தது. மேலும், 21 நபர்களுக்கு குறைவாக இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பயனாளிகளின் கணக்கில் உரிய தொகையை வரவு வைப்பதில் தவறு செய்த கூட்டுறவு சங்க செயலாளர் வேலு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட உள்ளது.

இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story