பண்ருட்டியில் பரபரப்பு, 1½ வயது குழந்தை கொலை


பண்ருட்டியில் பரபரப்பு, 1½ வயது குழந்தை கொலை
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் 1½ வயது குழந்தையை கொன்றுவிட்டு 2 மாதமாக நாடகமாடிய பெண் போலீசில் சிக்கினார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் நடராஜன், வக்கீல். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் பண்ருட்டி வள்ளலார் தெருவைச்சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் கமலியை(28) காதலித்து வந்தார்.

இவர்களின் காதலுக்கு நடராஜனின் 2-வது மனைவி தைரியலட்சுமி இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தைரிய லட்சுமியை பழிவாங்க கமலி திட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. தைரியலட்சுமியின் உறவினரான முருகன்-சிவரஞ்சனி தம்பதியரின் வீடு, கமலி வீட்டின் அருகே உள்ளது. சிவரஞ்சனியின் வீட்டுக்கு தைரியலட்சுமி அடிக்கடி வந்துசெல்வார்.

இதனால் சிவரஞ்சனியின் 1½ வயது மகள் பிரியதர்ஷினியை கொலை செய்து விட்டு, பழியை தைரியலட்சுமி மீது போட்டு விடலாம் என்று கமலியும்- நடராஜனும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிவரஞ்சனி தனது மூத்த மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார். அதனால் அவர் பிரியதர்ஷினியை பார்த்துக்கொள்ளுமாறு கமலியிடம் கூறி விட்டு சென்றிருந்தார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் கமலி, குழந்தை பிரியதர்ஷினியை தலையணையால் அமுக்கினார். இதில் மூச்சுத்திணறி குழந்தை செத்தது. குழந்தையை படுக்கையில் தூங்க வைத்தது போல் போட்டு விட்டு கமலி ஒன்றும் தெரியாதவர் போல இருந்தார்.

அப்போது சிவரஞ்சனி தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். அவரிடம் பிரியதர்ஷினி தூங்குவதால் எழுப்ப வேண்டாம் என்று கூறி விட்டு, கமலி தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

ஆனால் நீண்டநேரமாகியும் பிரியதர்ஷினி பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி, குழந்தையை எழுப்பி பார்த்த போது எழும்பாமல் இருந்தாள். அதனால் அவளை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் குழந்தையை பறிகொடுத்த சிவரஞ்சனி கதறி அழுதார். பின்னர் பிரியதர்ஷினியின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் கடந்த 19.12.2018 அன்று நடந்தது.

குழந்தை திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு கமலியின் நடவடிக்கை அப்பகுதியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது பற்றி பண்ருட்டி கிராம நிர்வாக அதிகாரி தங்கமணி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். பின்னர் அவர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கமலி, வக்கீல் நடராஜன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், குழந்தையை கமலி கொன்றுவிட்டு கடந்த 2 மாதமாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து கமலியை போலீசார் கைது செய்தனர். மேலும் நடராஜனை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story