தார்வாரில் துணிகரம் 3 இடங்களில் ரூ.12 லட்சம் நகை - பொருட்கள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தார்வாரில், 3 இடங்களில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகை - பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
உப்பள்ளி,
தார்வார் டவுன் வித்யாகிரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கம்பளி நிசார்க் குடியிருப்பில் வசித்து வருபவர் ஏஞ்சலினா கிரேகரி சேவியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று இருந்தார்.
அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.3.30 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கையடக்க கணினிகளை திருடி சென்று விட்டனர்.
இதேப்போல கதக் மாவட்டம் லட்சுமேஸ்வரை சேர்ந்த ஆனந்த் சோமசேகர் என்பவர் தார்வாரில் டவுனில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்து இருந்தார். அவருக்கு திருமண மண்டபத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.
அந்த அறையில் ஆனந்த் சோமசேகர் ரூ.4.30 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை வைத்து விட்டு வெளியே சென்றார். இந்த சந்தர்ப்பத்தில் அறையின் கதவை திறந்த மர்மநபர்கள் தங்கநகைகளை திருடி சென்று விட்டனர்.
மற்றொரு சம்பவம்
தார்வார் டவுன் மாளமட்டி சம்ருதா குடியிருப்பில் வசித்து வருபவர் அனுமந்தராவ் குல்கர்னி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் தங்கநகைகள், மடிக்கணினி, கேமரா, கையடக்கணினி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.4.14 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த 3 இடங்களிலும் சேர்ந்து மர்மநபர்கள் ரூ.12.14 லட்சம் மதிப்பிலான நகை, பணம், பொருட்களை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்த தனித்தனி புகார்களின்பேரில் தார்வார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story