நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு, சாத்துக்கூடலில் கிராம மக்கள் உண்ணாவிரதம்


நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு, சாத்துக்கூடலில் கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சாத்துக்கூடலில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே சாத்துக்கூடல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் அருகே கடந்த 10 ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்தது. ஆனால் தற்போது ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கூடாது என்று தனிநபர் ஒருவர் தடுத்ததாக தெரிகிறது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வழக்கமாக செயல்பட்டு வந்த அய்யனார் கோவில் அருகில் உள்ள இடத்தில் தான் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், வழக்கமான இடத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், இல்லையென்றால் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 

Next Story