தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம் 3-வது கட்டப்பணிகள் தொடக்க விழா


தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம் 3-வது கட்டப்பணிகள் தொடக்க விழா
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 9:52 PM GMT)

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்தின் 3-வது கட்டப்பணிகள் தொடக்க விழா நடந்தது.

வள்ளியூர்,

தாமிரபரணி ஆற்றில் வீணாகி கடலில் கலக்கும் தண்ணீரை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் வெள்ளநீர் கால்வாய் மூலம் தாமிரபரணி ஆற்றை கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 4 கட்டமாக நடந்து வரும் பணிகளில் 2-ம் கட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது 3-ம் கட்டப்பணிகள் தொடங்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.216 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இதன் பணிகள் தொடக்க விழா நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா கோவன்குளம் கிராமத்தில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். இன்பதுரை எம்.எல்.ஏ., பிரபாகரன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் லோகநாதன் வரவேற்றார். சிறப்பு திட்ட நாங்குனேரி கோட்ட செயற்பொறியாளர் ஞானசேகர் திட்ட விளக்க உரையாற்றினார்.

இதில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, நாங்குநேரி விஜயகுமார், அரசு வக்கீல் பழனி சங்கர், கல்யாணகுமார், பணகுடி நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் லாரன்ஸ், திசையன்விளை தாசில்தார் தாஸ்பிரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story