வள்ளியூரில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 33 பவுன் நகை துணிகர கொள்ளை
வள்ளியூரில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 33 பவுன் நகைகளை துணிகரமாக கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் யாதவர் நடுத்தெருவை சேர்ந்தவர் தேவதாசன் (வயது 66). ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் சுரேஷ்குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ்குமார் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வெளிநாட்டுக்கு புறப்பட்டார். அவரை வழி அனுப்புவதற்காக தேவதாசன் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் காரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்றார்.
பின்னர் தேவதாசன் மீண்டும் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதில் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 33 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து, வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து தேவதாசன் கொடுத்த புகாரின் பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
வள்ளியூரில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 33 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story