சீரமைப்பு பணிக்காக வாடிப்பட்டி பஸ் நிலையம் மூடப்பட்டது
வாடிப்பட்டியில் சீரமைப்பு பணிக்காக பஸ் நிலையம் நேற்று மூடப்பட்டது. தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளன. இதனால் அந்த கடைகளையும், பஸ் நிலைய வளாகத்தை சீரமைக்கும் பொருட்டு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தரைத்தளத்தில் 12, முதல் தளத்தில் 12 என 24 கடைகளும், கூடுதலாக 3 கடைகளும் கட்டுவது என்றும், கூடுதலாக ஒரு கழிப்பறை மற்றும் கிழக்கு, தெற்கு பகுதிகளில் உள்ள கடைகளை மராமத்து பணி செய்வது, பஸ்நிலையத்தின் நுழைவு, வெளியேறும் வாசலில் பெயர் பலகையுடன் கூடிய அலங்கார வளைவு அமைப்பது என்றும் முடிவுசெய்து சீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் பூமிபூஜை நடைபெற்றது. அதன்பின்பு பஸ் நிலைய கடைக்காரர்களுக்கு கடைகளை அகற்ற 1 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் தற்காலிக பஸ் நிலையம் தாதம்பட்டி நீரேத்தான் மந்தையில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அதில் பயணிகள் காத்திருக்கும் கூடம், குடிநீர், சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.
இந்தநிலையில் நேற்று காலை சீரமைப்பு பணிக்காக பஸ் நிலையம் மூடப்பட்டது. அப்போது பஸ்நிலையம் முன்பு கம்புகள் நடப்பட்டு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அடைக்கப்பட்டு பஸ்நிலையம் மாற்றம் பற்றிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. மேலும் மாற்று ஏற்பாடாக அரசு விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்கள் வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்புறம் இருவழித்தடத்தில் நின்றுசெல்லவும், சோழவந்தான் செல்லும் டவுன் பஸ்கள் போலீஸ் நிலையம் முன்பு இருந்து புறப்படவும், அலங்காநல்லூர், அழகர்கோவில் பஸ்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பிருந்து புறப்படவும், மற்ற பெரியார் பஸ்நிலையம், வத்தலக்குண்டு பஸ்கள் தற்காலிக பஸ்நிலையமான தாதம்பட்டி நீரேத்தான் மந்தையில் இருந்து புறப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இந்த பஸ் நிறுத்தங்கள் குறித்து பெயர் பலகை அமைக்க வேண்டும் என்றும், வழித்தடத்திற்கு இடையூறாக நிற்கும் மினிவேன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.