காஷிமிராவில், வணிக வளாகம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு போலீஸ் விசாரணை


காஷிமிராவில், வணிக வளாகம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Feb 2019 3:51 AM IST (Updated: 21 Feb 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

காஷிமிராவில் வணிக வளாகம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு உண்டானது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசாய்,

தானே மாவட்டம் காஷிமிராவில் உள்ள வணிக வளாகம் அருகே நேற்று காலை திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டது. இதைக்கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு வந்து பார்த்தனர். அப்போது, அங்குள்ள மும்பை - ஆமதாபாத் சாலையில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்து இருந்தது தெரியவந்தது. இதனால் பதறி போன அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனை செய்தனர். இதில் அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்து இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு கிடந்த தடயங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, அந்த வழியாக 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆசாமிகள் அந்த வெடிகுண்டை வீசிவிட்டு தப்பி சென்றதாக தெரிவித்தனர். போலீசார் வெடிகுண்டு வீசிய மர்மஆசாமிகளை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

என்ன காரணத்துக்காக நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க செய்தனர்? என்பதை கண்டுபிடிக்கவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வணிக வளாகம் அருகே மர்மஆசாமிகள் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story