12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது 15 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
மராட்டியத்தில் இன்று தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 15 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் மாநில கல்வி வாரியம் எச்.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.சி. எனப்படும் 10-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை நடத்தி வருகிறது. இதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த தேர்வினை மராட்டியத்தில் உள்ள மும்பை, நாக்பூர், புனே, கொங்கன் உள்ளிட்ட 8 கல்வி மண்டலங்களை சேர்ந்த 14 லட்சத்து 91 ஆயிரத்து 306 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் காலை நடைபெறும் தேர்வுகள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மதிய தேர்வுகள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இன்று ஆங்கில தேர்வுடன் தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 20-ந் தேதி வரை நடக்கிறது. தமிழ் தேர்வு வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
மும்பையில்...
மும்பை கல்வி மண்டலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 3 லட்சத்து 35 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். மும்பையில் மாணவர்கள் 512 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். காப்பி அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்க 30 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மாணவர்கள் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு 9322527076, 9423947266, 8888830139, 7506302353, 9819016270, 9969038020, 9867874623, 9869307657 ஆகிய எண்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்பு கொண்டு பேசலாம் என்று மாநில கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் தேர்வு பணிகள் பாதிக்கும். எனவே வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு ஆசிரியர்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story