நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: சிறிய கட்சிகள் அணி மாறுமா? பரபரப்பு தகவல்


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: சிறிய கட்சிகள் அணி மாறுமா? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2019 3:56 AM IST (Updated: 21 Feb 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் சிறிய கட்சிகள் அணி மாற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

பா.ஜனதா, சிவசேனா இடையே கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி சுமுகமான முறையில் ஏற்பட்டது. இதனால் இரு கட்சிகளுமே மகிழ்ச்சியில் உள்ளன. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளையும் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை பற்றி கவலைப்படாமல் பா.ஜனதாவும், சிவசேனாவும் பகிர்ந்து கொண்டன. அதன்படி பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன.

இதனால் ஏற்கனவே இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சி, ராஷ்டிரீய சமாஜ் பக்சா, ராயத் கிராந்தி பக்சா, சிவ் சங்காரம் ஆகிய சிறிய கட்சிகள் கலக்கம் அடைந்து உள்ளன. தங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தொகுதி பங்கீட்டை செய்து விட்டதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

தனிமைப்படுத்தி விட்டன

இதுகுறித்து இந்திய குடியரசு கட்சி பொது செயலாளர் அவினாஷ் மாடேக்கர் கூறியதாவது:-

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் சிறிய கட்சிகளுடன் இணைந்தே கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தின. ஆனால் தற்போது எங்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்கள் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு விட்டனர். இது எங்களை தனிமைப்படுத்தியது போல உள்ளது. இதன்மூலம் எங்களது ஓட்டுகளை பெற அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பது தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அத்வாலே வலியுறுத்தல்

பா.ஜனதாவும், சிவசேனாவும் மொத்த தொகுதிகளையும் பங்கீடு செய்து கொண்டாலும் அவர்கள் பகிர்ந்து கொண்ட தொகுதிகளில் சிலவற்றை தங்களது ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட சிறிய கட்சிகளுக்கு விட்டு கொடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே தலித் வாக்குகள் அதிகம் உள்ள தென்மத்திய மும்பையில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் தற்போது அந்த தொகுதி சிவசேனா வசம் உள்ளது. இதேபோல ராயத் கிராந்தி கட்சி, ஹட்கனாங்லே உள்ளிட்ட 2 தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது.

அணிமாற வாய்ப்பு

இதேபோல காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலும் சிறிய கட்சிகளுக்கு இன்னும் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

இதன் காரணமாக இரு அணிகளிலுமே சிறிய கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சிறிய கட்சிகள் அணி மாறவும் வாய்ப்பு இருப்பதாக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story