மாவட்டத்தில் 5 இடங்களில் 1,359 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்


மாவட்டத்தில் 5 இடங்களில் 1,359 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 22 Feb 2019 4:30 AM IST (Updated: 21 Feb 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 5 இடங்களில் 1,359 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தர்மபுரி,

தமிழக அரசின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, மொரப்பூர், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 இடங்களில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமை தாங்கினார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி வரவேற்றார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 1,359 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வீதம் 10.8 கிலோ தங்கம் மற்றும் ரூ.4.47 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் இதுவரை 20416 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் என மொத்தம் 87.472 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவியாக ரூ.70.04 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த 7061 பயனாளிகளும், 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்த 12,815 பயனாளிகளும் பயன் பெற்று உள்ளனர். உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை ரூ.5.24 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் நவீன செயற்கை கால்கள், 40 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 200 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாக்களில் கூட்டுறவு வங்கி இயக்குனர் தென்னரசு, முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் குருநாதன், அரசு வக்கீல் பசுபதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, பெரியண்ணன், வேலுமணி, பிரகாசம், மதிவாணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாபு உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story