நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயரை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்


நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயரை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 21 Feb 2019 5:10 PM GMT (Updated: 21 Feb 2019 5:10 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயரை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் ‘எந்த ஒரு வாக்காளரும் விடுபட கூடாது’ என்ற கருத்தை மையமாக கொண்டு, சிறப்பு சுருக்க முறை திருத்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து வைக்கவும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கண்ட நாட்களில் தவறாமல் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, அந்தந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உள்ள வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, தங்களது பெயர் விடுபட்டு இருந்தால் உடனடியாக படிவம் எண் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு அறையில் வாக்காளர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் 2 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம். வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை சரிபார்க்க www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி (வோட்டர் ஹெல்ப்லைன்) என்ற ஆண்ட்ராய்டு செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். பெயரை சரிபார்க்க மற்றும் பதிவு செய்ய எளிதானது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு வாக்காளர் உதவி மையத்தை அணுகலாம். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்றும், மேற்கண்டவை குறித்தும் ஊட்டியில் முக்கிய இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

Next Story