பெண்ணை கேலி- கிண்டல் செய்ததால் பிரச்சினை: இரு தரப்பினர் மோதல்; 6 பேர் கைது
பெண்ணை கேலி - கிண்டல் செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர், ஓசூர் தாலுகா தும்மனப்பள்ளி அருகே உள்ளது சத்தியமங்கலம். இந்த ஊரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 25). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (18), கீர்த்தி (22), அருண்குமார் (23), யஷ்வந்த், சந்திரகாந்த் (24), மணி (20). சம்பவத்தன்று அப்பகுதியில் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி நவீன் குமாரின் உறவினர்கள் மஞ்சுநாத், சுதாகர் ஆகியோர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் கார்த்திக்கின் சகோதரியை கேலி - கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் நவீன்குமாரை கத்தியால் குத்தி, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த நவீன்குமார் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக நவீன்குமார் பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமித்ரா வழக்குப்பதிவு செய்து கீர்த்தி, அருண்குமார், சந்திரகாந்த், மணி ஆகிய 4 பேரையும் கைது செய்தார். அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், தாக்குதல், காயம் விளைவித்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இதே போல அருண்குமார் பாகலூர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் சுதாகரும், மஞ்சுநாத்தும், கார்த்திக் என்பவரின் சகோதரியை கேலி - கிண்டல் செய்ததாகவும், இதை தட்டி கேட்க சென்ற இடத்தில் தானும், மல்லேஷ், மற்றொரு மஞ்சுநாத், கார்த்திக் ஆகியோர் தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து சத்தியமங்கலத்தை சேர்ந்த வினய், சுதாகர், மஞ்சுநாத், பைரேஷ், மினுகான் என்கிற வெங்கடேஷ், கொளதாசபுரம் ராஜசேகர் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சுதாகர், ராஜசேகர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |