கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு தேர்வு பணியில் விலக்கு அளிக்க வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு
கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கோபி தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- முதன்மை கண்காணிப்பாளர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தாள் அலுவலர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர் மற்றும் பறக்கும்படை உறுப்பினர், அறை கண்காணிப்பாளர் ஆகிய பணிகள் முதுநிலை ஆசிரியர் பணி மூப்பு அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பறக்கும்படை அலுவலர் பணி முற்றிலும் முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மட்டுமே பணி முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து பணிகளும் 10 கி.மீ. சுற்றளவில் உள்ள பள்ளிகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதய நோயாளிகள், கர்ப்பிணி ஆசிரியைகள் ஆகியோருக்கு தேர்வு பணி யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அரசு தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின்படி, 10 அறைகளுக்கு ஒரு பறக்கும்படை அலுவலர் நியமிக்க வேண்டும். மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் முதுநிலை ஆசிரியர்களாக இருப்பின், அவர்கள் தேர்வு பணிகளிலிருந்து விலக்கு கோரினால் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, மாவட்ட செயலாளர் கார்த்திக், பொருளாளர் அன்பழகன், அமைப்பு செயலாளர் சத்தியமூர்த்தி, தலைமையிட செயலாளர் வேந்தன், துணைத் தலைவர்கள் முருகன், செஞ்சி, மாவட்ட தணிக்கையாளர் லோகராஜா, மகளிரணி செயலாளர் உமா மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story