திருவெண்ணெய்நல்லூர் அருகே, இரு தரப்பினரிடையே தகராறு - 4 கடைகள் தீ வைத்து எரிப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 4 கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூரை அடுத்த எல்ராம்பட்டு கிராம பஸ் நிறுத்தம் அருகே டி.எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர் மாட்டிறைச்சி பிரியாணி மற்றும் வறுவல் கடை வைத்துள்ளனர். இதன் அருகே உள்ள அத்தண்டமருதூர் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வருபவர்கள் எல்ராம்பட்டு கடைக்கு வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம்.
அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்கள், பள்ளி மாணவிகளை சிலர் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டி.எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சல்மான் என்பவர் எல்ராம்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் மாட்டிறைச்சி வறுவல் கடை வைக்க ஏற்பாடு செய்தார். இதனை அதே கிராமத்தை சேர்ந்த சிலர், எங்கள் பகுதியில் கடை வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டு ஒருவரையொருவர் தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தின்போது 4 கடைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதோடு, எல்ராம்பட்டு கிராம மக்கள் வைத்திருந்த ராணுவ வீரர்களுக்கான அஞ்சலி விளம்பர பதாகையும் கிழித்து சேதப்படுத்தப்பட்டது.
இதை தட்டிக்கேட்ட அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (34), ஏழுமலை (28) ஆகியோரை ஒருதரப்பினர் கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் எல்ராம்பட்டு பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் நேற்று காலை அந்த கிராம மக்கள், மாணவ- மாணவிகள் அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வரும்போது அங்கு வந்த டி.எடப்பாளையத்தை சேர்ந்த ஒரு தரப்பினர், சாலையில் முள்மரங்களை போட்டு தகராறு செய்தனர்.
இதனை அறிந்த எல்ராம்பட்டு கிராம மக்கள் அந்த பஸ் நிறுத்த பகுதிக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தினால் இருதரப்பினர் இடையே மீண்டும் பிரச்சினை உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி, திருக்கோவிலூர் சப்- கலெக்டர் சாருஸ்ரீ, திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், திருக்கோவிலூர் தாசில்தார் சீனுவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை.
இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எல்ராம்பட்டு பஸ் நிறுத்தம் முன்பு பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். இப்பகுதியில் மாட்டிறைச்சி பிரியாணி, வறுவல் கடைகள் வைக்கக்கூடாது. அத்தண்டமருதூரில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும். எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
இதனை கேட்டறிந்த திருக்கோவிலூர் சப்-கலெக்டர் சாருஸ்ரீ கூறுகையில், அத்தண்டமருதூரில் செயல்பட்டு வரும் மதுக்கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். எல்ராம்பட்டு பஸ் நிறுத்தம் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இனிமேல் அங்கு கடைகள் வைக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் தகராறில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த துரைசாமி, சுரேஷ், கலீம்பாய், அன்வர்பாஷா உள்ளிட்ட 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story