நாமக்கல் மாவட்டத்தில் 5 புதிய வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 1,400-க்கும் அதிகமான எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்ட வாக்குச் சாவடிகளை பிரித்து கூடுதலாக 5 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
நாமக்கல்,
வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 1,621 வாக்குச்சாவடி மையங்களில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 5 வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பது, 14 வாக்குச்சாவடிகளின் பெயரை மாற்றம் செய்வது, 25 வாக்குச்சாவடிகளின் அமைவிடம் மற்றும் கட்டிடங்களை மாற்றம் செய்ய முதன்மை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளருக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு உள்ளது.அதன் அடிப்படையில் மொத்தம் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 5 வாக்குச்சாவடிகளை பிரித்து கூடுதலாக 5 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் அரசியல் கட்சியினருக்கு எடுத்து கூறப்பட்டது.
மேலும் அச்சக உரிமையாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எண்ணுடன் மட்டுமே டிஜிட்டல் பேனர்களை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட அரசு அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story