பாலக்கோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டு முன்பு கர்ப்பிணி தர்ணா போராட்டம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தல்
பாலக்கோட்டில் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டு முன்பு அமர்ந்து கர்ப்பிணி தர்ணாவில் ஈடுபட்டார்.
பாலக்கோடு,
தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சீனிவாசன் (வயது 40). இவர் பாலக்கோடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு இவரும், கிருஷ்ணகிரி குப்பன்மேட்டுத்தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவருடைய மகள் சத்யாவும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின்னர் சீனிவாசனும், சத்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் சத்யா வீட்டுக்கு சீனிவாசன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 2010-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சத்யாவுக்கு தெரியாமல் உமா என்ற பெண்ணை வேறு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையறிந்த சத்யா, சீனிவாசனிடம் கேட்டுள்ளார். இதனால் சீனிவாசன், அந்த பகுதியில் வேறு வீடு வாடகைக்கு எடுத்து சத்யாவை தங்க வைத்து அவ்வப்போது அங்கு சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் சத்யா கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் சீனிவாசனிடம் கூறியதால் அவர் சத்யா வீட்டுக்கு செல்வதை நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் செல்போன் எண்ணையும் அவர் மாற்றி விட்டதாக தெரிகிறது. 9 மாத கர்ப்பிணியான சத்யா நேற்று பாலக்கோடு வந்து போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வீட்டு முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று சத்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது நானும், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நான் கர்ப்பிணி என்று தெரியவந்ததும் அவர் என்னுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார். மேலும் வீட்டுக்கு வருவதும் இல்லை.
இதுதொடர்பாக தர்மபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கும், என் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நீதி வேண்டும் என்று சீனிவாசன் வீட்டின் முன்பு தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சத்யாவை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டு முன்பு அமர்ந்து கர்ப்பிணி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story