பரமக்குடி அரசு கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்


பரமக்குடி அரசு கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 6:09 PM GMT)

பரமக்குடி அரசு கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி,

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர்கள் மின்னணுவியல் துறை தலைவர் சிவக்குமார், தமிழ்த்துறை தலைவர் ரமேஷ்குமார் ஆகிய இருவரையும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து அதற்கான உத்தரவு பரமக்குடி அரசு கலைக்கல்லூரி முதல்வருக்கு வந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை முதல் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு

போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மணிமாறன், பரமக்குடி தாசில்தார் பரமசிவம், துணை தாசில்தார் பசுமதி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்ராமசுப்பிரமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம்சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களிடம் மாணவர்கள், பணியிடமாற்றம் செய்யப்பட்ட 2 பேராசிரியர்களும் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றியிருப்பது கண்டனத்திற்குறியது. மீண்டும் அவர்களை இதே கல்லூரியில் பணியாற்ற உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் மதியம் 2 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story