நிதி இல்லாததால் நீதி கிடைக்காமல் இருந்துவிடக்கூடாது சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு


நிதி இல்லாததால் நீதி கிடைக்காமல் இருந்துவிடக்கூடாது சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2019 3:15 AM IST (Updated: 22 Feb 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

நிதி இல்லாததால் நீதி கிடைக்காமல் இருந்துவிடக்கூடாது என்று சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி உமாமகேஸ்வரி கூறினார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்றது. சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மாவட்ட தலைவரும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியுமான உமாமகேஸ்வரி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டப்பணிகள் ஆணைக்குழு அனைத்து கோர்ட்டுகளிலும் செயல்பட்டு வருகிறது. இதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியான ஈரோடு பஸ் நிலையத்தில் முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கும் சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும். அதாவது நிதி இல்லாததால் நீதி கிடைக்காமல் இருந்துவிடக்கூடாது. இதனால் சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மனு மட்டும் கொடுத்தால் போதும். அவர்களுடைய மனுவின் மீது விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும்.

பொதுவாக பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக வன்கொடுமைகள் அதிகமாக நடக்கிறது. இதில் சில வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு நாடகத்தை நடத்துகின்றனர். மேலும், சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக சட்ட உதவிகள் பெறும் விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. குடும்ப பிரச்சினை, முதியவர்களை மகன் முறையாக கவனிக்காமல் இருத்தல் போன்ற புகார்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்தால், அவர்களை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று போலீசாரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி உமாமகேஸ்வரி கூறினார்.

முகாமில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் சட்டப்படி எப்படி தீர்வு காண வேண்டும் என்று அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்காக சட்ட விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் இந்த ஆண்டு இதுவரை 468 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் அதிகமான சம்பவங்கள் நடந்து உள்ளன. பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொதுமக்களும் போலீஸ் நிலையத்துக்கு வருவதில்லை. அதிகாரிகளை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பு பகுதி உள்ளது. அங்கு 24 மணிநேரமும் போலீசார் பணியில் இருப்பார்கள். எனவே எந்தவொரு புகாராக இருந்தாலும், அவர்களிடம் சென்று தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கு சட்டப்படி உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.

முகாமில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மாவட்ட செயலாளர் ரவிசங்கர், ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், ரீடு தொண்டு நிறுவன இயக்குனர் கருப்பசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் சட்ட விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர். இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

Next Story