இன்று நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள் , சிவகாசியில் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் திறப்பு


இன்று நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள் , சிவகாசியில் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் திறப்பு
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 7:24 PM GMT)

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இன்று நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ள நிலையில், பெரும்பாலான பட்டாசு ஆலைகள் நேற்று திடீரென திறக்கப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகாசி, 

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிய 1,070 பட்டாசு ஆலைகள் 3 மாதமாக மூடிக்கிடந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த பலர் சிவகாசியை விட்டு வெளியேறி மாற்றுத் தொழில் செய்யத்தொடங்கினர்.

இதற்கிடையே விதிகளை பின்பற்றி 40 சதவீத பட்டாசுகளை தயாரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரியின் உரிமம் பெற்றுள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 18-ந் தேதி முதல் செயல்பட தொடங்கின. முதல் கட்டமாக சிவகாசியில் உள்ள 150 பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு அங்கு முழுவீச்சில் பட்டாசு தயாரிப்பு நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பட்டாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி, மாசு குறைந்த பசுமை பட்டாசுகளை தயாரிக்க உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கென சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த பெண் விஞ்ஞானி சாதனாராயலு தலைமையில் நிபுணர் குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) சிவகாசி வருகின்றனர்.

சிவகாசியில் உள்ள சில பட்டாசு ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பசுமை பட்டாசு உற்பத்தி குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர். இதற்கிடையில் சிவகாசியில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகள் நேற்று காலை திறக்கப்பட்டன. இதில் பல பட்டாசு ஆலைகள் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி உள்ளன. திடீரென திறக்கப்பட்டதால் பல ஆலைகளில் போதிய அளவில் தொழிலாளர்கள் வரவில்லை.

இது குறித்து சிவகாசி காளஸ்வரி ஏ.பி.செல்வராஜனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

கடந்த 3 மாதங்களாக சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தற்போது ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அனுமதித்துள்ள பட்டாசுகளை தற்போது உற்பத்தி செய்யத் தொடங்கி உள்ளோம். மத்திய அரசு சார்பில் வரும் நிபுணர் குழுவினர் கொடுக்கும் ஆலோசனையின்படி பட்டாசுகளை உற்பத்தி செய்ய தயாராக இருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத பட்டாசுகளை தயாரிக்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு “ஆட்டோபாம், பிஜிலிவெடி, வரிவெடி” என சில வெடிகளை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. அதனால் தற்போது அவற்றை தயாரிக்கும் பணிகளை தொடங்கி உள்ளோம். முதல் நாள் என்பதால் போதிய தொழிலாளர்கள் பணிக்கு திரும்பவில்லை. வருகிற திங்கட்கிழமை முதல் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரும்பாலான பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு இருப்பதால், கடந்த 3 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்த தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளியூருக்கு வேலை தேடிச் சென்றவர்களும் சிவகாசிக்கு திரும்பி வருகிறார்கள். 

Next Story