வாணியம்பாடியில் ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க.வின் வலுவான கூட்டணியால் மு.க.ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார் கே.பி.முனிசாமி பேச்சு
அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்ததை கண்டு மு.க.ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார் என வாணியம்பாடியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசினார்.
வாணியம்பாடி,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வாணியம்பாடி அருகே மாராபட்டு கிராமத்தில் உள்ள விஜய்மகாலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். அமைச்சர் நிலோபர்கபில், கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ.ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க.வின் இருபெரும் தலைவர்களாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருந்து கட்சியை சிறப்பாக வழி நடத்தியதால் இன்று 1½ கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது அவர் மறைந்தவுடன் கட்சி விரைவில் அழிந்துவிடும் என எதிர்கட்சிகள் நப்பாசை கொண்டு திரிந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் எந்த கட்சியும் கூட்டணி சேராது என பகல் கனவு கண்டு வந்தனர். ஆயினும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அரசியல் சாதுர்யமான நடவடிக்கையால் பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தற்போது அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ளன.
அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து வருவதை கண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார். இதனால் அவர் செல்லும் இடங்களில் பதற்றத்தில் உளறிக் கொட்டி வருகிறார். அ.தி.மு.க.வின் இரு பெரும் தலைவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெற வைக்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் சபதம் ஏற்று வெற்றி கனியை பறித்து பாதத்தில் வைக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் டி.கே.முருகேசன், பொருளாளர் எம்.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் முகமதுஜான், ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தருமலிங்கம், கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், நகர செயலாளர்கள் சதாசிவம், எம்.மதியழகன், ஜெ.கே.என்.பழனி, டி.டி.குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், எம்.கே.ராஜா, ஜோதிராமலிங்கராஜா, ராமு, ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி தலைவர் புகழேந்தி, செயலாளர் டில்லிபாபு, விவசாய பிரிவு செயலாளர் ஆர்.வெங்கடேசன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story