நாடாளுமன்ற தேர்தலுக்கு விளம்பர பதாகைகள் வைக்க 15 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்


நாடாளுமன்ற தேர்தலுக்கு விளம்பர பதாகைகள் வைக்க 15 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 8:04 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கு விளம்பர பதாகைகள் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.

தேனி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விளம்பர பதாகைகள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக் கான ஆலோசனை கூட்டம், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். 15 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் விளம்பர பதாகைகள் வைக்கப்பட உள்ள இடத்தின் உரிமையாளரின் தடையில்லா சான்று, பதாகைகள் வைக்கும் இடம் மாநில அல்லது மத்திய அரசுக்கு சொந்தமானது எனில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அல்லது உதவி கோட்ட பொறியாளர் நிலையில் உள்ள அலுவலர்களின் தடையில்லா சான்று இணைக்க வேண்டும். நகராட்சி இடத்தில் வைப்பதாக இருந்தால் நகராட்சி ஆணையாளரின் தடையில்லா சான்று இணைக்க வேண்டும்.

இலகுவான மற்றும் பாதுகாப்பான வாகன போக்குவரத்துக்கோ, மக்கள் நடமாட்டத்துக்கோ இடையூறு இல்லை என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டரிடமும் தடையில்லா சான்று பெற வேண்டும். அத்துடன் தெருக்களில் பதாகைகள் வைப்பதாக இருந்தால் அந்த இடத்தை குறிப்பிட்டு காட்டும் வரைபடம் இணைக்க வேண்டும்.

விளம்பர பதாகைகள் வைப்பதற்கு ஒவ்வொரு பதாகைக் கும் அனுமதி கட்டணத்தை கருவூலத்தில் செலுத்தி, அதற்கான ரசீது இணைக்க வேண்டும். 6 நாட்கள் வரை பதாகை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

விளம்பர பதாகைகளில் அனுமதி எண், அனுமதிக்கப்பட்ட காலம், மொத்த விளம்பர பதாகைகளின் எண்ணிக்கை போன்றவற்றை ஒரு அங்குலத்துக்கு குறையாத அளவில் குறிப்பிட வேண்டும். 10 அடிக்கு குறைவான சாலைகளில் விளம்பர பதாதைகள் வைக்க அனுமதி கிடையாது.

40 அடி வரை அகலம் கொண்ட சாலைகளில் ஒருபுறம் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும். 40 அடிக்கு அதிகமான சாலையாக இருந்தால் மட்டுமே இருபுறமும் விளம்பரம் செய்யலாம்.

கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், நோயாளிகள் தங்கியுள்ள மருத்துவமனைகள், தெருமுனைகள், சாலை சந்திப்புகள், சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறம் 100 மீட்டம் தூரம் வரை, அறிவிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், சிலைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகிய பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது.

அனுமதியின்றி பதாகைகள் வைத்தால் அகற்றப்படும். அகற்றுவதற்கான செலவு தொகை விளம்பரம் வைத்தவர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும். விளம்பரத்தின் வாசகங்கள் ஆட்சேபகரமாக இருந்தால் உடனடியாக தானாகவோ அல்லது முறையீட்டின் பேரிலோ அகற்றப்படும். முறையான அனுமதி உத்தரவை சமர்ப்பித்த பின்னரே அச்சிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துப்புரவு ஆய்வாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உத்தமபாளையம் பகுதியில் பேனர் வைக்கக்கூடிய 13 இடங்கள் குறித்து எடுத்துரைக் கப்பட்டது.

இதேபோல் அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் மோகன்குமார் தலைமையிலும், தேவாரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் குணாளன் தலைமையிலும், க.புதுப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் ஆண்டவர் தலைமையிலும், கோம்பை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜெயலட்சுமி தலைமையிலும் அனைத்துகட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களில் எந்தெந்த இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

Next Story