ஆலந்தூர்-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயிலில் மாணவர்கள் பயணம்


ஆலந்தூர்-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயிலில் மாணவர்கள் பயணம்
x
தினத்தந்தி 22 Feb 2019 3:30 AM IST (Updated: 22 Feb 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயிலில் ஆலந்தூரில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை சிறப்பு மாணவர்கள் இலவசமாக கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையின் கீழ் சென்னையில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை இலவசமாக மெட்ரோ ரெயிலில் அழைத்து செல்கின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு மெட்ரோ ரெயில் செயல்பாடுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறப்படுகிறது.

அந்தவகையில் கடந்த 2 நாட்களாக அடையாறு, செட்டிநாடு ஸ்ரீஹரி விகாசம் பள்ளியை சேர்ந்த 40 சிறப்பு மாணவர்கள், சென்னை ஆலந்தூரில் இருந்து விமானநிலையம் மற்றும் விமானநிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் 4 முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் 73 பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் உடன் சென்றனர். சைதாப்பேட்டையில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை சுரங்கப்பாதையில் ரெயில் பயணத்தால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சுரங்க ரெயில் அனுபவம்

சென்னை மற்றும் புறநகரில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி நிர்வாகத்தினர், சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு இலவசமாக மெட்ரோ ரெயிலில் கல்வி சுற்றுலா பயணம் செய்யலாம். இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

கூட்டம் அதிகம் இல்லாத நேரமான காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பள்ளி மாணவ-மாணவிகளை இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதன் மூலம், சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த வித்தியாசமான அனுபவத்தை பெறுகின்றனர். அத்துடன், சென்னை மாநகரின் எழில் மிகுதோற்றம், விமான நிலையம் உள்ளிட்டவைகளை பார்த்து மகிழ்வதுடன், அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story