குடும்ப தகராறில் சம்மட்டியால் அடித்து மகளிர் சுயஉதவிக்குழு தலைவி படுகொலை; கணவர் தற்கொலை சேலத்தில் பயங்கரம்


குடும்ப தகராறில் சம்மட்டியால் அடித்து மகளிர் சுயஉதவிக்குழு தலைவி படுகொலை; கணவர் தற்கொலை சேலத்தில் பயங்கரம்
x
தினத்தந்தி 22 Feb 2019 4:45 AM IST (Updated: 22 Feb 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் குடும்ப தகராறில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியை சம்மட்டியால் அடித்து படுகொலை செய்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னங்குறிச்சி, 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் சின்னதிருப்பதி காந்திநகரை சேர்ந்தவர் காளியப்பன்(வயது 58), கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மனைவி சாந்தா(52). கூலி வேலைக்கு சென்று வரும் இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் இருந்தார். இவர்களுக்கு முருகன் என்ற மகனும், இந்திராணி என்ற மகளும் உள்ளனர்.

முருகனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. காளியப்பனுக்கு சொந்த ஊர் சங்ககிரி ஆகும். இவருக்கு அங்கு சொந்தமாக வீடு உள்ளது. காளியப்பனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் குடும்ப பிரச்சினை காரணமாக காளியப்பனுக்கும், சாந்தாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர் தனது மனைவியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வந்தார். ஆனால் அதையும் மீறி சாந்தா வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை அவர் வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது வீட்டுக்கு குடிபோதையில் வந்த காளியப்பனுக்கும், சாந்தாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அவர்களை மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சமாதானம் செய்தனர். பின்னர் முருகன், பிரியா ஆகியோர் தங்களது அறைக்கு தூங்க சென்று விட்டனர். சாந்தா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

காளியப்பன் மட்டும் நள்ளிரவு வரை தூங்காமல் மனைவி மீது ஆத்திரத்திலேயே இருந்தார். இதையடுத்து அவர் மகன், மருமகள் தூங்கிய அறையை வெளிப்பக்கமாக பூட்டினார். பின்னர் காளியப்பன், வீட்டில் இருந்த சம்மட்டியை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த மனைவி சாந்தாவின் தலையில் 2 முறை வேகமாக அடித்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை அடுத்து காளியப்பன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதிகாலையில் முருகன் தனது அறையை திறக்க முயன்றார். ஆனால் வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டி சத்தம் போட்டு கூப்பிட்டார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

அப்போது வீட்டில் சாந்தா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் முருகனின் அறையை திறந்து விட்டனர். இதையடுத்து அவர் தாயின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சாந்தாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த படுகொலை தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காளியப்பனை தேடி வந்தனர்.

இதனிடையே சங்ககிரியில் உள்ள தனது வீட்டில் காளியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சேலத்தில் உள்ள உற வினர்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து காளியப்பன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காளியப்பனுக்கு ஏற்கனவே பாப்பாத்தி என்ற மனைவி மற்றும் செந்தில்குமரன் என்ற மகன் இருந்ததும், இதில் பாப்பாத்தி இறந்ததை தொடர்ந்து அவர் சாந்தாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் சாந்தாவை கொன்று விட்டு, சங்ககிரி வந்த காளியப்பன் அங்கு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story