பழனி நகரில் அனுமதிக்கப்படாத இடத்தில் பேனர் வைத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்


பழனி நகரில் அனுமதிக்கப்படாத இடத்தில் பேனர் வைத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 8:58 PM GMT)

பழனி நகரில் அனுமதிக்கப்படாத இடங்களில் பேனர் வைத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பழனி, 

தமிழகம் முழுவதும் நடைபாதைகளுக்கு இடையூறாகவும், சாலையோரங்களில் அனுமதியின்றி பேனர் வைப்பதையும் முறைப்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் இதுகுறித்து கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி பழனி நகர் பகுதியில் பேனர் வைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் நாராயணன், தாசில்தார் சரவணக்குமார், செயற்பொறியாளர் சண்முகம், பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பேசும்போது, பேனர் வைப்பதற்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். நகர் பகுதியில் பேனர் வைப்பதற்கு தடை செய்யப்பட்ட இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, போலீஸ் துறை சார்பில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த இடங்களில் அரசியல் கட்சியினர் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

எந்தெந்த சாலைப்பகுதிகளில் எந்த அளவில் பேனர் வைப்பது குறித்து வரைமுறை செய்யப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட இடங்களிலும், விதிமுறைகளை மீறியும் பேனர் வைத்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் பேனர் அச்சிட்டு வழங்கும் நிறுவனங்கள் தங்களது பெயரை பேனரில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசுகையில், பேனர் வைப்பது குறித்து அதிகாரிகள் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், மரம், மின்கம்பங்களில் ஆணிகள் போன்றவற்றை அடித்து விளம்பரம் செய்கின்றனர். எனவே அதற்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது அதிகாரிகள் கூறும்போது, அது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதேபோல் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் முருகேசன், நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல்அலுவலர் கணேசன், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் விஜயலட்சுமி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் விஜயசந்திரிகா ஆகியோர் தலைமையில் விளம்பர பேனர்கள் வைப்பதை முறைப்படுத்துவது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

Next Story