பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை


பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2019 11:15 PM GMT (Updated: 21 Feb 2019 9:22 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே ஏற்பட்ட கூட்டணி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு கட்சியினரும் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு உள்ளனர்.

அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார் என்று நம்புகிறேன்.

கடந்த 6 மாதமாக தி.மு.க. கூட்டணி, கூட்டணி என கூறிக்கொண்டு தினமும் டெல்லிக்கு காவடி தூக்கிச் சென்றது. ஆனால் எந்தவித சலனமும் இன்றி மிகவும் இணக்கமாக இருதரப்பினரும் மகிழ்ச்சி அடையும் விதத்தில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி அமைந்துள்ளது.

பா.ஜனதா 5 இடமும், பா.ம.க. 7 இடமும் பெற்றதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். இதை நாங்கள் கூட்டணி என பார்க்கிறோம். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் எவை? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும். இதுபற்றி கட்சியின் தலைமை பேசி முடிவெடுக்கும். குமரி மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வருகிற 1-ந் தேதி வருகை தர இருக்கிறார்.

அப்போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை திறந்து வைக்க உள்ளார்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பின்னர் அவர் பார்வதிபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதேபோல் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பார்வையிட்டார்.

பணிகளை பார்வையிட்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டுவது குறித்தும், பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்வது குறித்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story