கோவையில் ரூ.1½ கோடி நகை கொள்ளை பெண் ஊழியர் உள்பட 6 பேர் சிக்கினர்
கோவையில் பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1½ கோடி தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் பெண் ஊழியர் உள்பட 6 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள்.
கோவை,
கோவை மில் ரோட்டை சேர்ந்த தனியார் பார்சல் நிறுவன ஊழியர் பிருத்திவி சிங் (வயது 26) என்பவர் கடந்த 7-ந் தேதி மும்பைக்கு விமானத்தில் அனுப்புவதற்காக 5¾ கிலோ தங்க நகைகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றார். அதிகாலை 5.30 மணியளவில் அவர் கோவை அவினாசி ரோடு பீளமேடு சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து தாக்கி மிளகாய்பொடி தூவி ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்கள் 3 பேரில் 2 பேர் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
தனியார் பார்சல் நிறுவன ஊழியர் தங்க நகைகள் கொண்டு செல்வது வெளியாட்களுக்கு தெரியாது என்பதால் தனியார் பார்சல் நிறுவன ஊழியர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதில் 8 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்களில் 6 பேர் தற்போது சிக்கினார்கள். மீதி 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த துணிகர கொள்ளைக்கு கோவையை அடுத்த சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிரவீணா என்ற பெண் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் தங்க நகைகளை பார்சலில் அனுப்பும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஆவார். அவர் தான் குறிப்பிட்ட தேதியில் இத்தனை கிலோ தங்க நகைகளை ஒருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்கிறார் என்று கணவர் தினகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் தினகரன் கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்த 6 பேரின் உதவியுடன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளார். இவர்களில் கார்த்திக், ஷெல்டன், மோகன்ராஜ், வெங்கடேஷ் ஆகியோர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story