“திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர்கள் கட்டாயம் வெற்றி பெறுவார்கள்” சுகிசிவம் பேச்சு


“திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர்கள் கட்டாயம் வெற்றி பெறுவார்கள்” சுகிசிவம் பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2019 4:00 AM IST (Updated: 22 Feb 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர்கள் கட்டாயம் வெற்றி பெறுவார்கள் என்று சொற்பொழிவாளர் சுகிசிவம் கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மகாராஜா ஸ்ரீ அவிட்டம் திருநாள் நினைவு காப்பக (அனாதை மடம்) மைதானத்தில் புத்தக திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. குமரி மாவட்ட கல்வி நிறுவனங்களும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் புத்தக திருவிழாவை நடத்துகின்றன. இது வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. புத்தக திருவிழாவுக்கு தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் மக்கள் வந்து தாங்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதையொட்டி தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் 7-ம் நாள் திருவிழாவான நேற்று டி.வி.டி. மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. யோகாவும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘நீ தான் நிஜம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்க்கையில் நாம் எதை அனுபவிக்கிறோமோ அது தான் நம்முடைய செல்வம். சேர்த்து வைப்பது செல்வம் அல்ல. பணம் சேர்ப்பதும், வீடு வாங்குவதும் மட்டும் முக்கியமல்ல. சேர்த்து வைத்த பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பது தான் முக்கியம். வாழ்க்கையை வியாபாரமாக நினைக்காதீர்கள். மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனில் நிகழ்காலத்தை அனுபவிக்க வேண்டும். எதிர்காலத்தை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருக்க கூடாது. அதிலும் எதிர்காலத்தை சிந்திக்காமலும் விட்டுவிட கூடாது. எதிர்காலத்துக்கு திட்டமிடுதலையும், நிகழ்காலத்தையும் சரியாக கையாள வேண்டும். திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர்கள் கட்டாயம் வெற்றி பெறுவார்கள்.

ஆனால் தற்போது இளைஞர்கள் எதிலும் திட்டமிடுவது இல்லை. திட்டமிடுதல் மிகவும் அவசியம். எனவே இளைஞர்கள் திட்டமிட்டு வாழ்க்கை நடத்துங்கள். படிப்பதை வாழ்நாள் முழுவதும் நிறுத்திவிடக் கூடாது. மக்களுக்கு ஒழுக்கம் மிகவும் அவசியமானது. மக்களுக்கு எப்போது ஒழுக்கம் வருகிறதோ அப்போது தான் வளர்ச்சி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story