வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூலித்தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க மாநில அரசு முடிவு குமாரசாமி பேட்டி
வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூலித்தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மாநில அரசே வழங்க...
கர்நாடகத்தில் 156 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் நிலுவையில் உள்ளது. இந்த சம்பளத்தை வழங்க தேவையான நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்கவில்லை.
வறட்சியால் மக்கள் கஷ்டப்படுவதால், நிலுவையில் உள்ள அந்த சம்பளத்தை மாநில அரசே வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான நிதி ரூ.938 கோடியை மாநில அரசு விடுவித்துள்ளது. இன்னும் 3 நாட்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.
துன்பத்திற்கு ஆளாகிறார்கள்
இந்த திட்டத்தில் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு ரூ.2,149 கோடி பாக்கி வைத்துள்ளது. இதில் ரூ.117 கோடி மட்டும் கடந்த 1-ந் தேதி வழங்கியது. கர்நாடகத்தில் வறட்சி நிவாரண பணிகளுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் மத்திய அரசு ரூ.950 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அந்த நிதியையும் இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் இதுபோன்ற அலட்சியப்போக்கால், மாநில மக்கள் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
கிருஷ்ண பைரேகவுடா
இந்த பேட்டியின்போது, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story