பெரியதாழையில் கடல் அரிப்பால் தடுப்பு சுவர் சரிந்தது வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்


பெரியதாழையில் கடல் அரிப்பால் தடுப்பு சுவர் சரிந்தது வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்
x
தினத்தந்தி 22 Feb 2019 4:10 AM IST (Updated: 22 Feb 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

பெரியதாழையில் கடல் அரிப்பால் தடுப்பு சுவர் சரிந்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தட்டார்மடம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள பெரியதாழையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.25 கோடி செலவில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டது. அதன்படி ஊரின் மேற்கு பகுதியில் இருந்து கடலுக்குள் 800 மீட்டர் தூரமும், கிழக்கு பகுதியில் இருந்து கடலுக்குள் 200 மீட்டர் தூரமும் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டது. கிழக்கு பகுதியில் குறைவான தூரத்துக்கு தூண்டில் பாலம் அமைக்கப்பட்டதால், அப்பகுதியில் கடல் அரிப்பு அதிகமாக உள்ளது.

இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைக்க முடியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரின் மேற்கு பகுதியில் கடல் அரிப்பு அதிகமாகி, கடற்கரையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. எனவே பெரியதாழையில் மேற்கு பகுதியைப் போன்று கிழக்கு பகுதியிலும் தூண்டில் பாலத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தூண்டில் பாலத்தை நீட்டிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பெரியதாழை கடற்கரையில் கிழக்கு பகுதியில் உள்ள தடுப்பு சுவரும் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று சரிந்து விழுந்தது. இதனால் அதன் அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

எனவே பெரியதாழையில் மேற்கு பகுதிக்கு இணையாக கிழக்கு பகுதியிலும் தூண்டில் பாலத்தை உடனே நீட்டிக்க வேண்டும். கடற்கரையில் சரிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெரியதாழை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கெனிஸ்டன் தலைமையில், அப்பகுதி மீனவர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்று, கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Next Story