பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தேர்தல் நாள் வரை காத்திருக்க கூடாது சிவசேனா சொல்கிறது
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தேர்தல் நாள் வரை காத்திருக்க கூடாது என சிவசேனா கூறியுள்ளது.
மும்பை,
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று காஷ்மீர் புலவாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது:-
துணை ராணுவ வீரர்களின் வீரமரணம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் தேர்தலில் வெற்றிபெறும் கருவியாக மாற்றப்படுகிறது. இத்தகைய நாடு எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்ளும்.
இங்கு வெறும் வார்த்தைகளால் மட்டுமே பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. முதலில் நடவடிக்கையில் இறங்குங்கள். பின்னர் பேசுங்கள்.
பதான்கோட், உரி மற்றும் புலவாமா பயங்கரவாத தாக்குதல்களில் இந்திய தரப்பில் இருந்து வெறும் எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டுள்ளது.
காத்திருக்க கூடாது
இலங்கையில், விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டுவந்தபோது அந்த நாட்டை உலக நாடுகள் பாராட்டியது. அதேபோல் அமெரிக்கா, பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து ஒசாமா பின்லேடனை கொன்றபோது உலகம் அந்நாட்டின் தைரியத்திற்கு தலைவணங்கியது.
ஆனால் நமது முதுகில் குத்தப்பட்ட பின்னரும் நாம் எதிர்த்து எதையும் செய்யவில்லை. அமெரிக்க, பிரான்ஸ் போன்ற நாடுகள் புலவாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது வேறு விஷயம். உண்மையில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும்.
எனவே மற்ற நாடுகளின் உதவியை எதிர்பார்க்காமல் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுக்க வேண்டும். இதற்காக தேர்தல் நாள் வரை காத்திருக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story