வேலூரில் நன்னடத்தை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
வேலூரில் நன்னடத்தை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வேலூர்,
இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சிறைத்துறை இணைந்து வேலூர், பாளையங் கோட்டை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நன்னடத்தை கைதிகளை கொண்டு நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைத்துள்ளது. முழுக்க முழுக்க கைதிகளை கொண்டு நடத்தப்படும் இந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து வேலூர் தொரப்பாடியில் மத்திய சிறை அருகில் ரூ.2 கோடியில் தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நடந்த விழாவில் வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி கல்வெட்டை திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை கோட்ட அலுவலக பொதுமேலாளர் குமாரவேல், தென்மண்டல பொது மேலாளர் சபிதா நடராஜ், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். திறப்பு விழாவைதொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டன.
வேலூர் மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த நன்னடத்தை கைதிகள் 15 பேர் இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிவார்கள். அவர்களுடன் சிறை பணி யாளர்கள் 11 பேரும் பணியில் இருப்பார்கள். பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் நன்னடத்தை கைதிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 சம்பளமாக வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோன்று வேலூர் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள டோபிகானா பகுதியில் ரூ.18 கோடியே 67 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 224 வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அங்கு நடந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டதற்கான சான்றுகளை வழங்கினார்.
, குடிசை மாற்றுவாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன், உதவி பொறியாளர் ரியோஜோன், உதவி நிர்வாக பொறியாளர் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story