ஆம்பூர் அருகே 1½ வருடமாக திறக்கப்படாத பள்ளி கட்டிடத்தை பொதுமக்கள் திறந்து வைத்தனர்


ஆம்பூர் அருகே 1½ வருடமாக திறக்கப்படாத பள்ளி கட்டிடத்தை பொதுமக்கள் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 23 Feb 2019 4:15 AM IST (Updated: 22 Feb 2019 9:25 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு 1½ வருடமாக திறக்கப்படாத பள்ளி கட்டிடத்தை பொதுமக்கள் திறந்து வைத்தனர்.

ஆம்பூர், 

ஆம்பூர் அருகே மின்னூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 60 லட்சத்தை அரசு ஒதுக்கியது. பணம் ஒதுக்கியும் கட்டிடம் கட்ட போதுமான இடவசதி இல்லாமல் இருந்தது.

அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மோகன்ராவ் குடும்பத்தினர் 1 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி கட்டிடம் கட்டும் பணி வேகமாக நடந்து வந்தது. பள்ளி கட்டிட பணி முடிந்து 1½ வருடம் ஆகியும் பள்ளியை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை தகவல் தெரிவித்தும் பள்ளியை திறக்க யாரும் முன்வரவில்லை.

இதனால் மின்னூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பள்ளியை திறக்க முடிவு செய்தனர். அதன்படி பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, கட்டிடத்திற்கு மின்விளக்கு அலங்காரம் செய்தனர். நேற்று காலை பூஜை செய்து பள்ளி கட்டிடத்தை பொதுமக்களே திறந்தனர்.

நிகழ்ச்சியில் நிலம் தானமாக வழங்கிய மோகன்ராவ் குடும்பத்தினர், தொழிலதிபர் லிக்மிசந்த் சிங்வி, முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜன், முன்னாள் துணை தலைவர்கள் என்.சங்கரன், சதீஷ்குமார், நாட்டாண்மைதாரர் கருணாகரன், சிவமூர்த்தி, எஸ்.பாண்டுரங்கன், பேராசிரியர் கிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வகுமார், குணசேகரன் மற்றும் பொதுமக்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பள்ளி கட்டிடம் திறப்பு விழாவில் வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர் வீரமணி, பள்ளி தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்.

Next Story