கடின உழைப்பைவிட அறிவுபூர்வமான உழைப்பே தேவை கலெக்டர் கந்தசாமி அறிவுரை


கடின உழைப்பைவிட அறிவுபூர்வமான உழைப்பே தேவை கலெக்டர் கந்தசாமி அறிவுரை
x
தினத்தந்தி 23 Feb 2019 4:00 AM IST (Updated: 22 Feb 2019 9:39 PM IST)
t-max-icont-min-icon

கடின உழைப்பை விட அறிவுபூர்வமான உழைப்பே தேவை என்று கலெக்டர் கந்தசாமி பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக வேலைவாய்ப்பு இல்லாமல் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் சிறப்பு திறன் பயிற்சி பயிலரங்கம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, மாவட்ட திறன் பயிற்சி மைய உதவி இயக்குனர் ரவி, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெயஸ்ரீ பிரகதாம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-

வெற்றி என்ற லட்சியத்தை நோக்கி பயணம் செய்யுங்கள். அரசுப் பணியில் சேர்வது லட்சியமாக இருப்பின் குறைந்தபட்சம் 6 மாதம் கடினமாக உழைத்து உங்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து வெற்றி பெறுங்கள்.

ஒரு கட்டிடம் கட்டும் போது திட்டமிட்டு செய்தால் தான் கட்டிடம் நன்றாக இருக்கும். அதுபோல் வெற்றி என்ற லட்சியத்தை திட்டமிட்டு அடையுங்கள். நாம் விரும்பும் துறையில் வேலைவாய்ப்பு பெற்றிட அந்த வேலைக்குத் தேவையான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசு வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்றிட இளைஞர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் கடின உழைப்பைவிட அறிவுப்பூர்வமான உழைப்பே தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிலரங்கத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக நடத்தப்பட்டு வரும் திறன் பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அரசு தொழிற்பயிற்சி மையத்தில் வழங்கப்படும் திறன் பயிற்சி குறித்தும் கூறப்பட்டது.

இந்த திறன் பயிற்சி பயிலரங்கம் மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் 15 தனியார் துறை நிறுவனங்களும், 9 திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டன. முகாமில் 629 இளைஞர்கள் கலந்து கொண்டனர். 428 பேர் திறன் பயிற்சிக்கு பதிவு செய்துள்ளனர். இதில், 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 147 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Next Story