நாடாளுமன்ற தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 3:30 AM IST (Updated: 22 Feb 2019 10:31 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஓமலூர், 

சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று மாலை ஓமலூரில் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் அவர் மேச்சேரி, குஞ்சாண்டியூர், மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், இரும்பாலை உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தார்கள். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க கூடாது என கோர்ட்டுக்கு சென்றவர்கள் மற்றும் சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கக்கூடாது என்று கூறியவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள். கூட்டணி என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள்.

நீங்கள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கட்சிகள் இல்லாமல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். அதே நேரத்தில் எங்களுக்கு கூட்டணி எதற்கு, ஜெயலலிதாவின் தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றுவோம். இதன் மூலம் மேச்சேரி பகுதியில் உள்ள குளங்களை நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஓமலூர் வந்த டி.டி.வி. தினகரனுக்கு ஓமலூர் பஸ்நிலையம் அம்பேத்கர் சிலை அருகே சேலம் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கே.கே.மாதேஷ்வரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஏராளமான பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சின்னான், மாவட்ட இணை செயலளார் செம்மண்ணன், பேரவை செயலாளர் ஜெமினி, இணை செயலாளர் நடராஜன், மேச்சேரி ஒன்றிய செயலாளர் மூர்த்தி, நங்கவள்ளி வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story