பெரியாம்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் ரூ.2.25 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
பெரியாம்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா பெரியாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் தியாகராஜன், சக்திவேல், உதவி பொறியாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வரவேற்றார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இந்த பள்ளி வளாகத்தில் 12 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தமிழகத்தில் படிக்கும் ஏழை மாணவ–மாணவிகளின் நலன்கருதி பள்ளிக்கல்வி உதவித்தொகை மற்றும் உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ரூ.290.71 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவதற்காக ரூ.138.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களின் மூலம் தமிழகத்தில் உள்ள மாணவ–மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.
விழாவில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், செல்வராஜ், கோவிந்தராஜ், பெரியண்ணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமார், தாசில்தார் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ரமணன், வடிவேலன் உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.