ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 900 கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 900 கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 23 Feb 2019 3:45 AM IST (Updated: 22 Feb 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 900 கனஅடியாக குறைந்தது.

பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். இதனிடையே பருவமழை பொய்த்து போனதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் காவிரி ஆறு மற்றும் ஐந்தருவிகள் வெறும் பாறைகளாக காட்சி அளிக்கின்றன. நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்தது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 19–ந்தேதி வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1,800 கனஅடியாக அதிகரித்தது.

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வந்ததால் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தனர். இதனிடையே மாதேஸ்வரன் மலையில் கோவில் திருவிழாவுக்கு போதுமான தண்ணீர் கிடைத்ததால் கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது.

நேற்று காலை வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 900 கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story