வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபடவேண்டும் அகில இந்திய செயலாளர் பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபடவேண்டும் என்று கட்சியின் அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி சட்டசபை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நல்லம்பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கீழானூர் ராஜேந்திரன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லம்பள்ளி வட்டார தலைவர் காமராஜ் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான ஸ்ரீவல்லபிரசாத் கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து 51 ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை கட்சி உயிரோட்டமாக உள்ளது. தர்மபுரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இருப்பினும் இந்த மாவட்டத்தில் கட்சி நல்ல நிலையில் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மீது மக்கள் கடுமையான விமர்சனங்களை எடுத்து வைக்கிறார்கள். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட துணைத்தலைவர்கள் பழனியப்பன், முனுசாமி, சிவலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜவீரப்பன், புவனேஸ்வரன், மாவட்ட செயலாளர் பாபுகுமார், வட்டார தலைவர்கள் மாதப்பன், வடிவேல், பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
இதேபோன்று அரூர் சட்டசபை தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அரூரில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story