ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம்- கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் திறப்பு


ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம்- கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் காணொலி காட்சி மூலம் திறப்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 4:15 AM IST (Updated: 23 Feb 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடத்தினையும், அரியலூர் மாவட்டத்தில் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்களையும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள் கட்டப்பட்டது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அந்த அலுவலகங்களில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது கலெக்டர் கூறுகையில், இதுநாள் வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள், தற்போது இந்த கட்டிடத்தில் இயங்க உள்ளன. இவ்வளாகத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர், தொழிலாளர் நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்க உள்ளன. இதன் மூலம் தொழிலாளர் நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒரே இடத்தில் பெற வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன், தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகமதுயூசுப் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கட்டப்பட்ட போலீஸ் நிலைய புதிய கட்டிடம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம், வாணதிரையான்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றையும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அப்போது அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி புதிய கட்டிங்களை பார்வையிட்டார்.விழாவில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, பொதுப்பணித்துறை பொறியாளர் அன்பரசி, தாசில்தார் குமரய்யா, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story