வருகிற ஜூன் மாதத்தில் 4 வழிச்சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் - மகேந்திரன் எம்.பி. தகவல்


வருகிற ஜூன் மாதத்தில் 4 வழிச்சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் - மகேந்திரன் எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 23 Feb 2019 4:30 AM IST (Updated: 23 Feb 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஜூன் மாதத்தில் 4 வழிச்சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று மகேந்திரன் எம்.பி. கூறினார்.

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை பொள்ளாச்சியில் இருந்து கோவை வரை 26.85 கிலோமீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.414.90 கோடி ஒதுக்கீடு செய்தது. இதில் கிணத்துக்கடவில் 2 கிலோ மீட்டரும், ஒத்தக்கால் மண்டபத்தில் 1 கிலோமீட்டரும், முள்ளுப்பாடி ரெயில்வே கேட்பகுதியில் 1 கிலோ மீட்டரும், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது கிணத்துக்கடவு ஊருக்குள் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த 4 வழிச்சாலை பணிகளை மகேந்திரன் எம்.பி., ஆய்வு மேற்கொண்டார். அப்போது 4 வழிச்சாலையில் உள்ள கோவில்பாளையம், தாமரைக்குளம், அரசம்பாளையம் பிரிவு ஆகிய பகுதியில் சாலையை கடந்துசெல்ல இடைவெளி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வைத்த கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர், முள்ளுப்பாடி ரெயில்வே கேட்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலபணிகளை பார்வையிட்டார். அப்போது அவர், கிணத்துக்கடவு பஸ்நிலையம் அருகில் அண்ணாநகர் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல 5½ மீட்டர்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை குறுகலான சாலையாக உள்ளதால் அதை 7 மீட்டராக அகலப்படுத்த வேண்டும். இதற்கு அரசின்நிலத்தை கையகப்படுத்தி நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என வருவாய்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலை பணிகள் மத்திய அரசின் சிறப்பு நிதி மூலம் விரைவாக நடைபெற்று வருகின்றன. தற்போது பணிகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது.

இந்த 4 வழிச்சாலையில் முள்ளுப்பாடி, கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மணடபம், ஈச்சனாரி ஆகிய 4 இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிணத்துக்கடவில் 2½ கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் 15 நாட்களில் பொதுமக்கள்பயன்பாட்டிற்கு வரும்.

அதேபோல் முள்ளுப்பாடிரெயில்வே மேம்பாலம்பணிகள் 2 மாதத்தில் முடியும். ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் 3 மாதத்தில் முடிவடையும். இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் கோவை- பொள்ளாச்சி சாலை முழுமையான பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் எட்டிமடைசண்முகம் எம்.எல்.ஏ., தேசிய நெடுஞ்சாலைதுறை திட்ட இயக்குனர் சிவக்குமார், திட்டமேலாளர் உதயசங்கர், கிணத்துக்கடவு தாசில்தார் சங்கீதா, பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, கிணத்துக்கடவு பேரூராட்சி அ.தி.மு.க செயலாளர் மூர்த்தி ,துணை செயலாளர் டி.எல்.சிங் உள்பட பலர் இருந்தனர்.

Next Story