மாவட்ட செய்திகள்

குறிஞ்சிப்பாடியில் பயங்கரம், பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை + "||" + In Kurinjipadi Scary, Murdered teacher inside school

குறிஞ்சிப்பாடியில் பயங்கரம், பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை

குறிஞ்சிப்பாடியில் பயங்கரம், பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை
ஒருதலைக்காதலால் பள்ளிக்கூடத்துக்குள் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தை வெட்டி தீர்த்து கட்டிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். குறிஞ்சிப்பாடியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குறிஞ்சிப்பாடி, 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பழைய ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி வள்ளி. இவர்கள் அங்கு ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்களுடைய மகள்கள் ரம்யா(வயது 22), ராஜேஸ்வரி(20).

இவர்களில் எம்.எஸ்சி. படித்து முடித்துள்ள ரம்யா, குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள ஸ்ரீ காயத்ரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்த பள்ளியை பொறுத்தவரை வாரத்திற்கு ஒரு ஆசிரியை, பள்ளி திறப்பதற்கு முன்பாகவே பணிக்கு வர வேண்டும். அதன்படி, இந்த வாரத்தில் ரம்யா பள்ளிக்கு முன்கூட்டியே சென்று வந்தார். இன்றைய தினம் தன் வாழ்நாளின் கடைசி நாளாக அமையப்போகிறது என்பதை அறியாத ஆசிரியை ரம்யா, தனக்கான பணி அட்டவணைப்படி நேற்று காலை 8.30 மணிக்கே பள்ளிக்கு சென்றுவிட்டார்.

பள்ளி கட்டிடத்தின், மேல் மாடியில்தான், பள்ளி தாளாளரின் வீடு அமைந்திருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், தாளாளர் ரங்கராஜன், பள்ளி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து, சாமி கும்பிட்டுவிட்டு, மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

அப்போது, பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கான அறையில் அமர்ந்திருந்த ரம்யாவை அவர் பார்த்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வர தொடங்கினர். ஆசிரியர்கள் தங்களுக்கான அறைக்கு சென்றனர். அப்போது அங்கு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரம்யா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மேலும் அவரது வலது கை விரல்கள் துண்டாகி கிடந்ததுடன், அருகே அரிவாள் ஒன்றும் கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக குறிஞ்சிப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரம்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.

ரம்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் பள்ளிக்கூடத்தில் இருந்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர். அதில், பானிபூரி வியாபாரி ஒருவர் தனது வீட்டின் முன்பு வைத்து தள்ளுவண்டியை கழுவி கொண்டு இருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் வேகமாக சென்றதை பார்த்ததாக தெரிவித்தார்.

இதனால் அந்த வாலிபர் மீது சந்தேகமடைந்த போலீசார், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் எங்காவது இருக்கிறதா என்று விசாரித்தனர். அப்போது பள்ளிக்கு அருகே உள்ள அரிசி ஆலையின் உரிமையாளர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அங்கு பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில், அந்த பானிபூரி வியாபாரி சொன்னது போன்று, ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார், ரம்யாவின் பெற்றோரிடம் காண்பித்து விசாரித்தனர்.

அதில், அந்த நபர் விருத்தாசலம் அருகே விருத்தகிரிகுப்பத்தை சேர்ந்த அரங்கண்ணல் என்பவரது மகன் ராஜசேகர்(வயது 23) என்பது தெரியவந்தது. மேலும் டிப்ளமோ பட்டய படிப்பு முடித்து கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவர், ரம்யாவை ஒருதலையாக காதலித்தும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

ரம்யாவின் மீது கொண்ட தீராத காதலால், ராஜசேகர் பள்ளிக்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ராஜசேகர் தனக்கு கிடைக்காத ரம்யா, யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைத்து அவரை தான் கொண்டு வந்த அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார். அதை ரம்யா தடுக்க முயன்ற போது, அவரது வலது கையின் விரல்கள் துண்டாகி விட்டது. தொடர்ந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியாததால், அவரது அரிவாளுக்கு இரையாகி இருக்கிறார். அதாவது ராஜசேகர் ரம்யாவின் கழுத்தில் அரிவாளால் வெட்டியதில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் ராஜசேகரை பிடித்தால்தான், கொலைக்கான முழு உண்மை விவரமும் தெரியவரும் என்பதால் போலீசார் அவரை பிடிக்க விருத்தகிரிகுப்பத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து ராஜசேகரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆசிரியை மீது கொண்ட கண்மூடித்தனமான காதலால் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கழுத்தை வெட்டி அவரை படுகொலை செய்த சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.