தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வால்பாறையில் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வால்பாறை,
வால்பாறையில் உள்ள அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து வால்பாறை பழைய பஸ்நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கூட்டமைப்புத்தலைவர் வால்பாறை அமீது தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கும், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் எஸ்டேட் ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்த வேண்டும். அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களும் இணைந்து பல்நோக்கு நவீன ஆஸ்பத்திரியை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். ஆண்டுதோறும் குளிர்காலங்களில் கம்பளி ஆடைகள் வழங்்கவேண்டும். தொழிலாளர்களின் குடியிருப்புகளில் உரிய பராமரிப்பு செய்து தரவேண்டும், வீடுகளுக்குள் கழிவறைகள் கட்டித்தரவேண்டும், ஆண்டுதோறும் வீடுகளுக்கு வர்ணம் பூசுவதற்கு உதவித் தொகையாக ரூ.500 வழங்க வேண்டும். வனவிலங்கு தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் தரவேண்டும். 2002-ம் ஆண்டில் குறைக்கப்பட்ட சம்பளத்தை உடனே தரவேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் சவுந்திரபாண்டியன் (எல்.பி.எப்), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி), வீரமணி (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருப்பையா (ஐ.என்.டி.யு.சி) வரவேற்றார். மற்றும் நிர்வாகிகள் கேசவமருகன், கல்யாணி, சுந்தாராஜன் மாணிக்கம், சேகர், கந்தசாமி, எட்வர்டு, அருணகிரிபாண்டி, தர்மராஜ், சலாவூதீன், பொன் கணேசன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எஸ்டேட் நிர்வாகங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் வால்பாறை அமீது பேசும்போது, தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்துவதை நிறுத்தி, தொழிலாளர்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு உடனடியாக முன்வந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, தொடர் போராட்டங்களை நடத்துவோம். உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி ஒரு வாரத்திற்குள் நல்லமுடிவு காணவேண்டும். இல்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார். முடிவில் ஜனதா தள கட்சியின் தொழிற்சங்க பொதுச்செயலாளர் கோவை பொன்னான் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story