விளம்பர பலகைகள் விவகாரம்: அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்தது


விளம்பர பலகைகள் விவகாரம்: அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 23 Feb 2019 3:30 AM IST (Updated: 23 Feb 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

விளம்பர பலகைகள் அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சியினருடன் சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பலகைகள் அமைப்பது தொடர்பான அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அச்சக சங்கத்தினருடன் மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் தலைமையிலான கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பலகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் ஆகியவற்றை அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற்று அமைக்க வேண்டும்.

அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் தெரிவித்தார். விளம்பர பலகைகள் வைக்க படிவம்-1 ஐ பூர்த்தி செய்து பலகைகள் வைக்கும் நாளுக்கு, 2 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தடையில்லா சான்று பெறவேண்டும். மேலும் பலகைகள் அமைக்கப்படும் இடம் தனியார் கட்டிடமாகவோ, அரசு நிறுவன கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து தடையின்மை சான்று, அமைக்கப்பட உள்ள இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு அனுமதி கட்டணமாக ரூ.200 மற்றும் காப்பீட்டு தொகை ரூ.50 உள்ளிட்டவைகளை வரையோலையாக கொடுக்கவேண்டும். விளம்பர பலகைக்குயின் கீழ் அனுமதிக்கப்பட்ட நாள், அனுமதி எண், கால அவகாசம் போன்ற தகவல்களை வைக்க வேண்டும் என்று கமிஷனர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story