குடியரசு தினவிழா வாழ்த்து அனுப்பிய அரசு பள்ளி மாணவர்களுக்கு கவர்னர் பதில் கடிதம்
கரூர் அருகேயுள்ள அரசு பள்ளி மாணவர்கள் குடியரசுதின விழா வாழ்த்து தெரிவித்து கவர்னருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். இதற்கு பதில் கடிதம் எழுதப்பட்டு, கவர்னரிடமிருந்து கடிதம் வந்திருப்பது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
க.பரமத்தி,
கரூர் அருகேயுள்ள க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டியப்பட்டி அரசு தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கடந்த மாதம் குடியரசுதினவிழாவை முன்னிட்டு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினனர். இந்த நிலையில் அந்த கடிதத்தை படித்ததும், அதற்கு பதில் எழுதி 68 கடிதங்கள் கவர்னர் கையெழுத்திட்ட சென்னை ராஜ்பவனிலிருந்து தொட்டியப்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு நேற்று தபால் அனுப்பப்பட்டது. கவர்னரிடமிருந்தே தங்களுக்கு கடிதம் வந்ததை எண்ணி மாணவர்கள் மற்றும் அந்த பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மகிழ்ச்சி யடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தின் போது, அந்த கடிதத்தை பிரித்து பார்த்து கவர்னர் எழுதியிருந்தது குறித்து மாணவர்களுக்கு, அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மூர்த்தி எடுத்துரைத்தார். உங்களது பள்ளியிலிருந்து வந்த குடியரசு தினவிழா வாழ்த்து கடிதம் பெறப்பட்டது. குழந்தை பருவத்திலேயே தேசப்பற்று இருப்பது பெருமைக்குரியது. மாணவர்கள் தான் இந்த நாட்டின் எதிர்கால தூண்கள். உங்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து சமூக பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுகிறேன். உங்களது வெற்றி இந்த நாட்டின்வெற்றியாக இருக்கட்டும் என கவர்னர் அனுப்பியிருந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பெயரை குறிப்பிட்டும் தனி தனியாக கடிதம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இது தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தியிடம் கேட்ட போது கூறுகையில், மாணவ, மாணவிகளின் திறமையை வளர்க்கும் பொருட்டும், கடிதம் எழுதும் முறையை கற்று கொடுக்கும் பொருட்டும் கவர்னருக்கு குடியரசு தினவிழா வாழ்த்து கடிதம் அனுப்பினோம். கவர்னரிடமிருந்து பதில் கடிதம் வந்தது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியப்பட்டி அரசு பள்ளியின் வரலாற்றில் இது ஒரு சிறப்புக்குரிய தருணம் ஆகும் என்று தெரிவித்தார். மாணவர்கள் தங்களுக்கு வந்த கடிதத்தை பெற்றோருடன் காண்பித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த கடிதத்தை நினைவு சின்னமாக பாதுகாப்போம் என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story